ரகு சாஸ்திரிகள் அதுவரை சொல்லிக்கொடுத்த பிராணாயாமம் பற்றிய விஷயங்களை ஞாபகத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக என் சிந்தனையெல்லாம் அவர் சொல்லிக் கொடுத்த பூரகம், கும்பகம், ரேசகம் .. அதாவது சுவாசத்தை இழுத்துக் கொள்வது, சில நொடிகள் அந்த சுவாசத்தை தக்க வைத்துக் கொள்வது பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியே விடுவது... இப்படி செய்யும்போது விரல்களை எப்படி எல்லாம் வைத்துக்கொள்வது... என்ற முக்கியங்களில் என் கவனம் முழுவதும் நிறைந்திருக்கிறது.
'நமக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் தெரியுமே. அதச் சொல்லிண்டே இத பண்ணனும் அவ்வளவு தானே' என்று ஒரு அசட்டு கணிப்பிலும் என் எண்ணம் இருந்தது.
என்னை அறியாமல் வெளிவந்த சிரிப்புகளை அவர் பார்த்துக் கொண்டிருந்திருந்தார் போலும்.
'என்ன பாஸு உனக்கு நீயே சிரிச்சிண்டு இருக்கே. என்ன விஷயம்? சொன்னால் நானும் சேர்ந்து சிரிப்பேனோன்னோ?'
'ஒன்னும் இல்ல மாமா. நீங்க இதுவரைக்கும் சொன்ன பிராணாயாமம் மந்திரத்தையும் சேர்த்துச் சொல்லி கற்பனை பண்ணிண்டிருந்தேன். சரியா செய்யறேனா தப்பா செய்யறேனான்னு எனக்குள்ளேயே குழப்பம். அதான் சிரிச்சிண்டிருந்தேன்.'
'அதான் நான் வந்துட்டேனே. சரியா நான் சொல்லிக் கொடுத்தோண்ன நீ சமத்தா நன்னா செய்யப்போற. ரெடியா?'
'பாஸு, உனக்குத்தான் பிராணாயாமம் மந்திரம் அத்துப்படி ஆச்சே. எங்க சொல்லு பாப்போம்.'
ஆரம்பிக்கிறேன்....
- ௐ பூஹு
- ௐ புவஹ
- ௐ சுவஹ
- ௐ மஹஹ
- ௐ ஜனஹ
- ௐ தபஹ
- ௐ ஸத்யம்
'இத்தோட சித்த நிறுத்து. நான் சொன்னதுக்கு அப்புறம் மேற்கொண்டு போகலாம் சரியா?'
'ஓம் அப்படிங்கறது பிரணவ மந்திரம். அது நோக்கு தெரியுமோன்னோ?'
'தெரியும் மாமா'
'அந்த ஓம் சொல்லிட்டு ஏதோ ஒவ்வொரு வார்த்தையா சொல்றியே. அதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா?'
'ஒரளவு ஞாபகம் இருக்கு மாமா. ஏதோ ஏழு லோகத்தை குறிக்கறதா நீங்க எனக்கு பூணூல் போட்ட சமயத்துல சொல்லிக் கொடுத்திருக்கேள்னு நெனைக்கிறேன்.'
'நெனைக்கிறது என்ன.... அதேதான்'
'சரி கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா? இந்த அகண்ட பிரபஞ்சத்தில மொத்தம் பதினாலு லோகங்கள் இருக்கிறதா சொல்றா. நாம இருக்கிற பூமிய சேர்த்து ஏழு லோகம் மேலேயும் பூமிக்கு கீழே ஏழு லோகமும் இருக்கு. முதல்ல பூமியும் பூமிக்கு மேலே உள்ள ஏழு லோகங்கள் என்ன என்ன அப்படின்னு பார்ப்போம்.'
'பூலோகம், புவர்லோகம் சுவர் லோகம் ஜனலோகம், மகர் லோகம் தபலோகம் அப்புறம் கடைசியா சத்தியலோகம்.'
'இந்த ஏழுலேயும் யார் இருக்கா அப்படிங்கறதையும் விவரிச்சு சொல்லி இருக்கா. பூலோகத்துல யார் யார் இருக்காங்கறதுதான் நோக்கே தெரியுமே. அத விட்டுட்டு பார்த்தோம்னா புவர்லோகத்தில பித்ருக்கள் இருக்கிறதாவும் சுவர் லோகத்துல தேவர்கள் இருக்கிறதாவும் துருவன் மாதிரி கடும் தபசு செஞ்சுட்டு நட்சத்திர அந்தஸ்து அடஞ்சவா மகர் லோகத்தில இருக்கிறதாவும் ரிஷிகள் யோகிகள் முனிவர்கள் இவாள்லாம் ஜன லோகத்திலேயும் தபோலோகத்துலேயும் இருக்கிறதாவும் கடைசியா பிரம்ம தேவர் லோகமா சத்தியலோகத்தையும் சொல்லியிருக்கா. இந்த புவர்லோகம் சுவர்லோகம் மஹர் லோகம் ஜனலோகம் தபலோகம் சத்யலோகம் எல்லாமே பூலோகத்துல இருக்கிற நமக்கு மேல இருக்கிற லோகங்கள்.'
'இதே மாதிரி அதல லோகம் விதல லோகம் சுதல லோகம் தலாதல லோகம் மஹாதல லோகம் ரசாதல லோகம்
பாதாள லோகம் ... இந்த ஏழும் பூமிக்கு அடியில இருக்கிற லோகங்கள்.'
'இந்த ரெண்டு ஸெட்டையும் சேர்த்து தான் நாம சுருக்கமா ஈரேழு லோகம் அப்படின்னு புரிஞ்சுக்கறோம்.'
இப்போது எனக்கு அவரிடம் ஏதோவொரு கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதை புரிந்து கொண்ட அவர்:
'நீ என்ன கேக்க போறேங்கறது எனக்கு புரிஞ்சுடுத்து. பிராணாயாமம் மந்தரத்துல பூமிக்கு கீழே இருக்கிற லோகங்கள் வரவே இல்லையே? இதானே உன் டவுட்?'
நான் கேட்க நினைத்தது இதைத்தான். எனவே என் ஆர்வம் புன்சிரிப்பையும் இணைத்துக் கொண்டது.
'யாராவது பூமிக்கு கீழ போயி வாழறதுக்கு விருப்பப்படுவாளா இல்லாட்டி தேவர்கள் முனிவர்கள் யோகிகள் நட்சத்திரங்கள் இவாள்ல்லாம் வசிக்கிற லோகங்கள்ல ஏன் அதுக்கு மேல எல்லாத்தோடையும் உயர்ந்ததான பிரம்மா விஷ்ணு சிவன் எல்லாரும் இருக்கிற சத்திய லோகத்தில் வாழறதுக்கு ஆசைபடுவாளா?'
'அதனாலதான் சூட்சுமமா பூமிக்கு கீழ இருக்கிற எந்த லோகத்தையும் பிரணாயாமம் மந்தரத்தில சேர்க்கல. இப்ப புரிஞ்சுதா?'
'ஸத்ய லோகத்துக்கு காரணமாவும் சாட்சியாவும் இருக்கிற பரந்தாமனை நோக்கி பயணிக்கிற புண்ணிய ஆத்மாக்கள் இந்த அத்தனை லோகங்களையும் விட்டுட்டு வைகுண்டம் என்கிற பரமபதத்தை சேர்ந்துடறான்.'
'அப்படிப்பட்ட பரமபதத்தை அடையறதுக்கு ஓம்காரம் என்கிற ஒலியும் அதை ஒட்டிய மூச்சு கட்டுப்படுத்துதலும் நமக்கு ரொம்ப ஹெல்ப் பண்றது.'
'ஓங்காரமே பூலோகம் ஓங்காரமே புவர்லோகம் ஓங்காரமே சுவர் லோகம் ஓங்காரமே மகர் லோகம் ஓங்காரமே ஜனலோகம் ஓங்காரமே தபோலோகம் ஓங்காரமே சத்தியலோகம்.'
இதுதான் பிராணாயாமத்தோட பார்ட் ஒன். அதாவது நான் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தபடி மூச்சை இழுக்கும்போது மட்டும் சொல்ற மந்திரங்களோட அர்த்தங்கள். குறிப்பா சொல்லப் போனா நான் முன்னாடி சொன்னேனே பூரகம். அந்த பூரக மந்திரங்கள் அப்படின்னு கூட புரிஞ்சுக்கோ.'
'இப்ப நான் உனக்கு ஒரு நாற்பது பக்கம் நோட்டும் பென்சிலும் தரப்போறேன். அதுல இந்த பிராணாயாமத்தை பத்தி நீ இதுவரைக்கும் புரிஞ்சிண்ட சகலத்தையும் எழுதி காமி பார்ப்போம்.'
நாற்பது பக்கம் நோட்டு ஒன்றையும் பென்சிலையும் தருகிறார். புதிய நோட்டாக அது இருந்தது அதைப் பிரித்து முகர்ந்து பார்க்கிறேன்.
'நோக்கு புது நோட்டு வாசனை பிடிக்குமாக்கும்?'
'ரொம்ப ரொம்ப பிடிக்கும் மாமா. ஸ்கூல்ல நோட்டுப் புத்தகம் எல்லாம் கொடுத்தோண்ண மூந்து மூந்து பார்த்துண்டே இருப்பேன்.'
'கழுதைக்கு தானே தெரியும் புஸ்தக வாசனை?'
'மாமாஆஆஆஆ. நான் ஒண்ணும் கழுதை இல்ல.'
'சும்மா ஜோக்குக்கு சொன்னேன் டா.'
அவர் மடத்து காரியங்களில் ஈடுபடுகிறார். நான் நோட்டுப் புத்தகமும் எழுத்துமாக.....
தொடரும்..
No comments:
Post a Comment