மடத்துக்கு அவர் சொன்ன நாளில் வரும்போது சாஸ்திரிகள் எங்கள் தெருவில் வசிக்கும் வேணு மாமாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
'பாஸு நீ உள்ள போயி பாண்டுரங்கன் முன்னாடி உக்காந்து காயத்ரி பண்ணிட்டிரு. வேணு மாமாவோட ராதா கல்யாண உத்வவத்தைப் பற்றி பேசிட்டு வந்துடறேன். சித்த முன்ன பின்ன போகலாமோன்னோ? அவசரம் ஒண்ணும் இல்லையோன்னோ உனக்கு?'
'காயத்ரி பண்ணல மாமா. நான் பின்னாடி தோட்டத்துல போய் விளையாடிண்டிருக்கேன்.'
'அதான பார்த்தேன். உன் பிரண்ட்ஸ் செடிகள்லாம் உன்ன பத்தி கார்த்தால தான் கேட்டுதுக. எப்போதும் மாட்டற எடத்துல தான் தோட்டத்து சாவி இருக்கு. ஆனா ஒண்ணு. தோட்டத்துல கவனமா இருக்கணும். மத்தியான வேளைல பாம்பு நடமாட்டம் இருக்கும். ஜாக்கிரத.'
என்னை உள்ளே அனுப்பிவிட்டு வேணு மாமாவோடு பேச்சை தொடர்கிறார்.
'பாஸு நல்ல கொழந்த வேணு. ரொம்ப சமத்து. இங்க அடிக்கடி வந்து நாலு நல்ல விஷயத்த கேட்டுண்டு போவான்.'
'குட் பாய்தான். ஆனா திருப்பாற்கடல் அந்த பக்கம் இருக்கற கரைல அவனும் அவன் பிரெண்ட்ஸும் அடிக்கிற லூட்டி இருக்கே. பயமா இருக்கும் அவன் டைவ் அடிக்கிறத பார்த்தா.'
'குழந்ததானே. பெரியவனானா புரிஞ்சிக்க போறான். சின்ன குழந்தையா இருக்கச்சே தானே வாழ்க்கைல சந்தோஷம் கிடைக்கறது எல்லாருக்கும். என்னமோ பாஸுவ பார்க்கறச்சயல்லாம் அவனோட அப்பா ஞாபகம் வந்து வயத்தை பிசைறது. நன்னா அமோகமா வரணும் குழந்தை.'
'எனக்கும் புரியறது. ஆனா பாவம் அவனோட அம்மாக்கு ஒரே பையன். நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்கோ. உங்ககிட்ட தான் அவனுக்கு அபிமானம் ஜாஸ்தியா இருக்கு.'
'சொல்றேன் வேணு. நேரம் பார்த்து சொல்றேன்.'
அவர்கள் பேச்சுக்கு இடையில் நான் வந்ததால் என்னைப் பற்றியும் சிறிது பேசிவிட்டு ராதா கல்யாண உத்ஸவ ஏற்பாடுகளை பற்றி தொடர்கிறார்கள்.
ராதா கல்யாண வைபவம் அந்தப் பாண்டுரங்க மடத்தில் நடக்கும் ஒரு ரம்யம்.
அவருடன் பேச்சுக்களை முடித்துவிட்டு நான் தோட்டத்தில் என்ன செய்கிறேன் என்பதை அவர் எனக்குத் தெரியாமல் ரசிப்பது உண்டு. அப்படித்தான் அவர் சத்தம் ஏதுமில்லாமல் தோட்டத்திற்குள் வந்து என்னை கவனித்துக்கொண்டிருந்தார். சில நொடிகளில் அவரை நான் பார்த்து விட்டேன்.
'வேணு மாமா போயாச்சா மாமா. நாம ஆரம்பிக்கலாமா?'
'உன் பிரண்ட்ஸுகளோட பேசிண்டு இருக்கியே. இன்னொரு நாள் வேணா கிளாஸ வச்சுக்கலாமா?'
'வேண்டாம் மாமா. நீங்க கிளாஸ ஆரம்பிங்கோ.'
அவர் மடத்திற்குள் திரும்பி செல்ல நான் அங்கிருந்த ஒரு நந்தியாவட்டை செடியை கையால் அடித்து, 'இந்த அடிய மறக்காத' என்று சொல்லிவிட்டு அவரை தொடர்கிறேன்.
மணைகளை போடுகிறேன். பாண்டுரங்க வந்தனம் குரு வந்தனம் முடிகிறது.
'சரி பாஸு. இன்னிலேந்து சந்தியா வந்தன மந்திரங்களுக்கு உள்ளே போகலாம். நான் சொல்லி இருக்கேன் இல்லையா முன்னாடி. சந்தியாவந்தனம் ரெண்டு பகுதிகளா இருக்கு.... பூர்வ பாகம் உத்தர பாகம். அதுல பூர்வ பாகத்த ஆரம்பிச்சுடறேன் இன்னிக்கே.'
கவனத்திற்காக என்னை ஒரு முறை என் உடம்பை நானே சற்று அசைத்துக் கொண்டு நேராக உட்காருகிறேன்.
'முதல்ல ஆசமனம்.... அதுலேந்து தான சந்தியாவந்தனம் ஆரம்பிக்கிறது. இல்லையா? எப்படி பண்ணுவ அத? bபாவமா செஞ்சு காட்டு எனக்கு.'
என் முன்னால் பஞ்ச பாத்ர உத்தரணி இருப்பதாக நினைத்துக்கொண்டு 'அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: .... என்று ஆரம்பித்து கேசவா நாராயணா மாதவா கோவிந்தா விஷ்ணோ மதுசூதனா திரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹ்ருஷிகேசா பத்மநாபா தாமோதரா' என்பதுவரை சொல்லி காண்பிக்கிறேன்.
'சமத்து. நன்னா பண்றியே'
பாராட்டிவிட்டு தொடர்கிறார்.
'பாஸு, இதோட அர்த்தங்கள நான் இப்போ உனக்கு சொல்லி புரிய வைக்கறேன். அதாவது அச்சுதனுக்கு நமஸ்காரம் அனந்தனுக்கு நமஸ்காரம் கோவிந்தனுக்கு நமஸ்காரம்...
கேசவா நாராயணா மாதவா..
என்று உன்னோட பனிரெண்டு திருநாமங்களால உன்னைப் போற்றி இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இட்டுக் கொள்கிறேன். இதுதான் அர்த்தம்.'
'இந்த மந்திரங்கள சொல்லிண்டே நாம என்ன பண்றோம்? உடம்புல உள்ள சில உறுப்புகள தொட்டுக்கறோம். இல்லையா பாஸு? இந்த மாதிரி தொட்டுக்கரதுக்குத் தான் ரக்ஷை இட்டுக்கறதுன்னு பேரு.'
'இந்த ஆசமனத்துல ரெண்டு விஷயங்கள முக்கியமா கவனிக்கணும். விஷ்ணுவோட முதல் மூணு நாமாக்கள நாம சொல்லும்போது ஒவ்வொரு தடவையும் ஜலத்த உள்வாங்கி குடிக்கிறோம். பிறகு அவரோட பன்னெண்டு நாமாக்களை சொல்லிண்டே கன்னங்களை, கண்கள, தோள்களை, இருதயத்துக்கு பக்கத்துல, சிரசுல.... இப்படி நம்ம கையில இருக்கிற வேற வேற விரல்களால தொட்டு bபாவமா ரக்ஷ இட்டுக்கிறோம் இல்லையா?'
'இதுலேந்து என்ன புரிஞ்சிக்க முடியறது? ஜலம், நாமம், ரக்ஷை இந்த மூணும் ஆசமனத்தோடு ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது அப்படின்னு தெரியறது. இல்லையா?'
'நாம உயிர் வாழறதுக்கு ஜலம் தான் பிரதானமா இருக்கு. நீ கூட உங்க பள்ளி கூடத்துல படிச்சிருப்பியே... நம்ம உடம்புக்குள்ளேயே எழுபது பர்ஸென்ட் தண்ணீர் இருக்காமே. அதுலேந்தே ஜலத்தோட அவசியம் நம்மளால புரிஞ்சிக்க முடியறது இல்லையா?'
'ஆசமனம் போது உத்திரணியில ஜலத்தை எடுத்து பருகரச்ச ஜல தேவதையையே நாம நம்ம உடம்புக்கு சாக்ஷி தேவதையா bபாவமா அழச்சிக்கிறோம். பஞ்சபூதங்கள்ல ஒண்ணான ஜல தேவதைய நம் உடம்புக்குள்ளேயே அழச்சு பிரார்த்தனை பண்றோம்னும் புரிஞ்சிக்கலாம்.'
'சில ஆன்மீக விஷயங்கள்ல நாம நமக்கு முன்னோர்கள் எல்லாம் வழிவழியாய் செஞ்சத அப்படியே ஏத்துண்டடணும். இதை ஏன் அப்படி பண்ணனும் அதை ஏன் இப்படி பண்ணனும் இப்படி செஞ்சா என்ன அப்படி செஞ்சா கொறைஞ்சா போயிடுவோம் அப்படிங்கிற கேள்விகளுக்கெல்லாம் பதிலே என்ன மாதிரி வாத்தியார்களால கொடுக்க முடியாது. சட்டங்களும் விதிமுறைகளும் ஒரு நாட்டுல எல்லா ஜனங்களாலும் ஏத்துக்கப்படற மாதிரி ஆன்மீக விஷயங்கள்லையும் சாஸ்திரங்களும் நியதிகளையும் சம்பிரதாயங்களையும் வழி வழியா நடைமுறையில் இருக்கிறத அப்படியே ஏத்துக்கணும். புரிஞ்சுதா கொழந்த?'
'இந்த ஆசமனத்தையே வெச்சிப்போமே உதாரணத்துக்கு.'
'ஆசமனம் எப்போதும் கிழக்க பாத்துண்டோ வடக்க பாத்துண்டோ தான் செய்யணும். மேற்க பார்த்தும் தெற்கு பார்த்தும் செய்யப்படாது. அதோட இல்லாம, கைகள முழந்தாள்களுக்கு இடையே அடக்கமா வெச்சிண்டு குந்திண்டு உட்கார்ந்து தான் ஆசமனம் செய்யணும். சுண்டு விரலையும் கட்டை விரலையும் விட்டுட்டு மத்த விரல்களை சித்த மடக்கினாப்புல வெச்சிண்டா உள்ளங்கையில் ஏற்படக் கூடிய குழியில கொஞ்சம் கொஞ்சமா தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ளணும். ஆசமனம் முடிஞ்சோண்ண ரெண்டு தடவ கைய அலம்பிக்கணும். எந்த சமயத்திலேயும் பவித்ரம் போட்டுண்டு ஆசமனம் செய்யப்படாது. பவித்ரத்தை காதுல எடுத்து வெச்சுட்டு ஆசமனம் பண்ணிட்டு அதுக்கு பிறகு தான் பவித்ரத்தை போட்டுக்கணும்.'
'ஆசமனத்துக்கே எவ்வளவு ரூல்ஸ் இருக்கு பாத்தியா? இதுக்கெல்லாம் ஏன் அப்படி செய்யணும் இப்படி செய்யணும் இப்படி செஞ்சா என்ன கொறஞ்சி போய்டுவோம் அப்படின்னு கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் ஏற்கனவே சொன்ன மாதிரி பதில்களே கிடையாது. வழக்கமா எல்லா மூதாதையர்கள் எல்லாம் பண்ணிண்டு வந்தத அப்படியே நாமளும் ஏத்துக்கணும்.'
'பாஸு, அங்க இருக்கிற பஞ்ச பாத்திர உத்தரணிய எடுத்துண்டு வந்து ஒரு தடவை என் முன்னாடி bபாவமா ஆசமனம் பண்ணி காமி.'
பஞ்ச பாத்ர உத்தரணி சகிதம் வந்து அவருக்கு முன் அவர் சொல்லிக் கொடுத்ததை போல ஒருமுறை ஆசமனம் செய்து காண்பிக்கிறேன்.
'அவ்வளவு தாண்டா பாஸு. இப்படி பண்றத என்னிக்கும் மறக்கக்கூடாது. சரியா?'
'சரி இப்ப மூணு தடவை அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ அப்படின்னு சொல்லிண்டு உத்தரணி ஜலத்த உள்ள செலுத்திண்டுட்ட. அதோட ஆசமனம் முடிஞ்சுடறதா? இல்லையோண்ணோ? அப்புறம் என்ன பண்ற?'
இப்போது நான் சொல்கிறேன் அவரிடம். கேசவா நாராயணா மாதவா.... அப்படின்னு சொல்வேன் மாமா.'
'வெரி குட். ஆனா அந்த பன்னெண்டு நாமாக்களை சொல்லிண்டே நம்மளோட வாய் பகுதிகள் அதாவது கன்னங்கள், கண்கள், காதுகள் இருதய பகுதி அப்புறம் கடைசியா சிரசு அதாவது தலை இதை எல்லாத்தையும் முறைப்படி தொடுகிறோமா இல்லையா?'
'இப்படி பண்றதுல ஒரு சின்ன விஷயம் இருக்கு. இன்னன்ன விரல்கள் இன்னன்ன ஸ்தானத்திற்கு அப்படின்னு விதி இருக்கு.'
'நம்மளோட கட்ட விரலும் வாயும் அக்னியோட ஸ்தானமா சொல்லப்பட்டிருக்கு. அதனால அதை இரண்டையும் கேசவா நாராயணா என்ற நாமாக்கள் மூலமா கனெக்ட் பண்றோம்.'
'அதே மாதிரி பவித்ர விரலும் கண்களும் சூரியனுடைய ஸ்தானமா சொல்லப்பட்டிருக்கு. அதனால பவித்ர விரலால வலது இடது கண்களை முறைப்படி அடுத்த இரண்டு நாமாக்களான மாதவா கோவிந்தா அப்படின்னு சொல்லி தொட்டுக்கறோம்.'
'ஆள்காட்டி விரலும் நம்ம நாசிகளும், அதாவது மூக்கோட ரெண்டு பக்கம், வாயுவோட ஸ்தானம். விஷ்ணோ மதுசூதன அப்படிங்கற நாமாக்களை சொல்லிண்டு கனெக்ட் பண்றோம்.'
'சுண்டு விரலும் காதுகளும் இது மாதிரியே இந்திரனுடைய ஸ்தானமா இருக்கு. இதுக்கு நாமாக்கள் த்ரிவிக்கிரம வாமன.'
'இப்படியே நடு விரலும் தோள்களும் பிரஜாபதியோட ஸ்தானமா அமையறது. ஸ்ரீதர ரிஷிகேஷ என்கிற நாமாக்கள் தோள்களை நடுவிரலால தொடும்போது சொல்லப்படறது.'
'அடுத்தபடியா உள்ளங்கையை ஹ்ருதயத்துக்கு பக்கத்துல வெச்சிண்டு பத்மநாபா அப்படிங்கற நாமத்த சொல்றோம். சில வாத்தியார்கள் பத்மநாபா அப்படின்னு சொல்லிண்டு நாபிய தொட்டுக்கணும்னு சொல்லிக்கொடுப்பா. அதுவும் தப்பு இல்ல. பகவான ஹ்ரதயத்தில வெச்சுக்கரதும் ஆதாரத்துலேயே இருத்திக் கரதும் சரிதானே?'
'கடைசியா அதே உள்ளங்கையை சிரசுல உச்சந்தலையில வெச்சு தாமோதரான்னு சொல்றோம்.'
'இப்படி ஒவ்வொரு உறுப்பையும் பகவன் நாமாக்கள உச்சரிண்டே சொல்லும்போது அந்தந்த உறுப்புகள் அந்தந்த ஸ்தானாதிபதிகள் அனுக்கரஹங்களோட நீ சந்தியா வந்தன ஜபத்த ஆரம்பிக்க ஆக்டிவேட் பண்ணிக்கறோம்னு ஐதீகம்.'
'தொடு உணர்ச்சி மூலமா அங்கங்களை இயக்கறத பத்தி நாம விஞ்ஞானத்தில படிக்கிற மாதிரி அப்படின்னும் புரிஞ்சிக்கலாம். நாமாக்களோட ஒலிகளும் இதுக்கு ரொம்ப ஹெல்ப் பண்றது.'
'இதோட இந்த கிளாஸ முடிச்சிக்கறேன். அடுத்த வகுப்புல பிராணாயாமம் பத்தி சொல்லித்தரேன். சரியா?'
'மாமா, நடுப்புல கணேச வந்தனம் இருக்கே? அத விட்டுட்டேளே.'
'இத பாருடா.. எங்க பாஸு எவ்வளவு புத்திசாலி? அடுத்த கிளாசுக்கு வரும்போது அதையும் சொல்லித்தரேன். இந்த ஆசமனத்திலேயே இன்னொரு விஷயம் விட்டுப்போச்சு. என்ன ஞாபகப்படுத்து மறக்காம. அதையும் பார்த்துடுவோம்.'
'மாமா நான் இப்ப இன்னொரு தடவை ஆசமனம் பண்ணி காமிக்கிறேன். சரியா இருக்கான்னு பார்க்கிறேளா?'
டெமோ செய்து காட்டுகிறேன். ஓரிரண்டு தவறுகளை திருத்துகிறார்.
தொடரும்.
No comments:
Post a Comment