பகுதி 4
இரு தினங்களில் மீண்டும் எங்களது சந்திப்பு பாண்டுரங்க மடத்தில்.
'உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா பாஸு. சரியா டயத்துக்கு வந்துடறது தான்.'
இப்படி ரகு சாஸ்திரிகள் சொன்னவுடன் கொஞ்சம் கூலா இருந்தது எனக்கு. இருப்பினும் ஒரு சிரிப்பு. அதில் என் கள்ளத்தனம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.
'ஏண்டா சிரிக்கிற? சரியாத்தானே சொல்றேன்.'
'ஒண்ணுமில்ல மாமா. அதுக்கு காரணம் எங்க அம்மாவும் தான். அடிக்கடி ஞாபக படுத்திண்டே இருப்பா. மாமா உனக்காக காத்துண்டு இருப்பா... அவர் கோச்சுக்கிர மாதிரி லேட்டா போக கூடாதுன்னு தார் குச்சி போட்டுண்டே இருப்பா.'
'அதான் விஷயமா?'
'எனக்கும் டயத்துக்கு வரணும்னு தோணும். அம்மாவும் ஞாபகப்படுத்திண்டே இருக்கறதால மறக்கறதுக்கு சான்ஸே இருக்காது.'
தலையிலே ஒரு செல்லக்குட்டு அவரிடமிருந்து.
'சரி ஆரம்பிச்சுடுவோமா?'
வழக்கம்போல கிழக்கு மேற்காக உட்காருகிறோம். தேக்கு மணையில் அவர். பிரப்பம்பாயில் நான்.
'மாமா நமஸ்காரம் பண்றேன்.'
'ஸ்வாமிக்கு முதல்ல பண்ணிட்டு அப்புறம் எனக்கு பண்ணு.'
அப்படியே செய்துவிட்டு அவர் முன் அமர்கிறேன்.
'சந்தியாவந்தனமே மூணு விஷயத்தில்தான் இருக்கு. ஒண்ணு அர்க்ய பிரதானம் இரண்டாவது பிராணாயாமம் அப்புறம் ஜபம் அதாவது காயத்ரி ஜபம்.'
'இதுல அர்க்ய பிரதானம் தான் சந்தியாவந்தனத்துக்கே ஜீவநாடியா இருக்கு. இந்த அர்க்ய பிரதானத்துல மார்ஜனமும் ப்ராசனமும் அடக்கம். என்னடா புதுசு புதுசா மார்ஜனம் ப்ராசனம் அப்படி இப்படின்னு என்னென்னவோ சொல்றேனேன்னு நெனைக்கறியா. முதல்ல சொல்றத நன்னா காது கொடுத்து கேட்டுக்கோ. அப்புறம் ஒவ்வொன்னா சொல்லி புரிய வெக்கறேன்.'
'பிரம்ம தேஜஸ நமக்கு கொடுக்கப் போற சக்திவாய்ந்த காயத்ரி முன்னாடி நாம நிக்கறதுக்குள்ள நாம நம்மள சுத்தப்படுத்திண்டு நம்மள சுத்தி இருக்கிற சூழலையும் சுத்தப்படுத்திக்கணும். தூய தமிழ்ல சொல்றதா இருந்தா அகத்தூய்மை புறத்தூய்மை ரெண்டுலயும் நாம கவனமா இருக்கணும். இப்படி நம்மள தூய்மைப்படுத்தறதுக்கு சில மந்திரங்கள் சந்தியாவந்தனத்தில இருக்கு. ப்ரோக்ஷன மந்திரம்னு சுருக்கமா கூட சொல்லலாம்.'
இந்த இடத்தில் சற்று நிறுத்தி என்னைப் பார்க்கிறார். அவரிடம் கேட்க நினைக்கும் கேள்வி என் நெற்றியில் மெல்லிய சந்தேக ரேகையாக அவர் பார்த்திருக்க வேண்டும்.
'நீ என்ன கேட்கப் போறேங்க.றது எனக்கு புரியறது. நாமதான் கை கால் முகம் எல்லாம் அலம்பிண்டு நெத்தி இட்டுண்டு சுத்தமா தானே சந்தி பண்ண உட்கார்றோம். அப்புறம் எதுக்கு தனியா மார்ஜனம்? ப்ரோக்ஷணம்? அப்படின்னு தானே கேட்க நெனைக்கறே?'
இதுதான் குருவுக்கும் சிஷ்யக்கும் இடையே நடக்கும் டிரான்ஸ்மிஷனா? நான் கேட்க நினைப்பதை அவர் புரிந்துகொண்டு அந்தக் கேள்வியை அவரே எடுத்துரைத்துவிட்டு தொடர்வது சிக்ஷையின் பிரத்தியேகம் போலிருக்கிறது.
என்னுடைய ஆமோதிக்கும் அசட்டு சிரிப்பை பார்த்துவிட்டு அவரே தொடர்கிறார்.
'ஸ்நானத்துல அஞ்சு தினுஸு இருக்கு டா பாஸு. சாதாரணமா பக்கெட்டையும் மக்கையும் (mug) வெச்சிண்டு உடம்புல ஊத்திண்டு ஸ்னானம் பண்றது. கிணத்திலேந்து எறைச்சி ஊத்திக்கிறது, ஆறு குளங்கள்ல இறங்கி குளிக்கறது ... இதெல்லாம் வாருணம்னு பேரு. வருணன் சம்பந்தப்பட்டதால இத வாருணம் அப்படின்னு சொல்றா. இதுலேயே முக்கிய ஸ்நானம்னா நீர்நிலைல இறங்கி குளிக்கிறது தான். மத்ததெல்லாம் ரெண்டாம் பட்சம்தான்.'
'அடுத்தாப்புல பார்த்தோம்னா விபூதி ஸ்நானம். இது அக்னி சம்பந்தப்பட்டது. பசுவோட விறட்டிய பஸ்பமாக்கி ஜலம் விட்டு குழைக்காம அப்படியே பூசிக்கிறது. இத ஆக்நேயம்னு சொல்லுவா இல்லாட்டி பஸ்மோ தூளனம்னும் சொல்லுவா.'
'உனக்கு மூணாவதா ஒரு ஆச்சரியமான ஸ்நானத்தை பத்தி சொல்ல போறேன். பசுக்கள் கூட்டமா போயிண்டு இருக்கறபோது கிளம்புகிற குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகச் சொல்லியிருக்கா ரிஷிகள்லாம். அத ‘கோ தூளி' ன்னு சொல்லுவா. பகவான் பாலக்ருஷ்ணனே இப்படித்தான் நீல மேக ச்யாமள ரூபத்துல பசுக்களின் தூள் சந்தனப் பொடி தூவினாற் போலப் படிஞ்சு “கோதூளீ தூஸரித”னாக இருந்தானாம். பசுக்கள் மந்தை சந்தையாக போற போது, காத்துல சலனம் அங்கே ஜாஸ்தியாகி, குளம்படி மண் நிறையக் கிளம்பும். இந்த கோதூளி நம்மை அபிஷேகம் பண்ணும்படியாக அங்க போய் நிண்ணுண்டா அதுவும் அஞ்சுல ஒரு தினுஸு ஸ்நானம் தான். இதுக்கு ‘வாயவ்யம்’ என்று பெயர் சூட்டியிருக்கா – அதாவது வாயு என்கிற காற்றின் ஸம்பந்தமுடையதுன்னு அர்த்தம். காற்றால் தானே தூளி பறக்கிறது இல்லையா?'
'அடுத்தது நாம பேசப்போறது திவ்ய ஸநானத்த பத்தி. இது ஒரு ஆச்சரியமான ஸ்னானம். இன்னும் சொல்லப் போனா இந்த ஸ்தானத்துக்கு கொடுத்து வெச்சிருக்கணும்னு கூட சொல்லலாம். அபூர்வமாக சில சமயம் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பெய்யுமோன்னோ? பார்த்துருக்கியா?அந்த மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வருகிற தீர்த்தத்துக்கு ஸமானம். அதனால அந்த ஜலத்தில் குளிக்கறதுக்கு ‘திவ்யஸ்நானம்’ னு பேர். எப்போதாவது இப்படி வெய்யிலோடு மழையும் பெய்ஞ்சா உடனே நாம அதில் போய் நின்னுண்டணும்.'
'கடைசியா நாம பாக்கப் போகற ஸ்னானம் ப்ராஹ்மம். நாங்க வாத்யாரெல்லாம் சேர்ந்து பூஜை பண்ணும்போது பார்த்திருப்பியே. ஒரு கலசத்தை வெச்சு மந்திரம் எல்லாம் ஜபிச்சு கடைசியா எல்லாருக்கும் தர்ப்பை கட்டால ப்ரோக்ஷணம் செய்வோமே? அந்த மாதிரி வகை தான் வேத ஸ்நானாம் அல்லது ப்ராஹ்ம ஸ்நானம் அப்படின்னு சொல்லுவா. புரிஞ்சுதா நோக்கு?'
'பார்க்கப்போனா எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான்! எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல் அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈஸ்வர ஸ்மரணையோடு, ஈஸ்வரார்ப்பணமாகப் பண்றதாத்தானே அத்தன ஆசாரங்களும் உருவாக்கியிருக்கா இல்லையா? அதுலேயே சிறப்பா வருணனையோ, வேறு ஒரு தேவதையையோ மந்திரபூர்வமாக ஒரு கும்பத்தில ஆவாஹனம் பண்ணி அதுக்கப்புறம் அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொள்றதுக்கு ‘ப்ராஹ்மம்’ னு பேர் வந்திருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும்.'
'உடம்பு அசக்தமாய் எந்த விதத்திலும் வாருண ஸ்நானம் செய்ய முடியாதவர்களுக்கு இந்த மந்திர தீர்த்த ப்ரோக்ஷணமே ‘கௌண’ ஸ்நானமாகறது.
பஞ்சபூதங்கள் என்னும் அஞ்சு பூதங்கள ஐந்து ஸ்நானங்களோட ஒப்பிட்டு பார்த்தோமேயானால், வாருணம்தான் அப்பு; ஆக்நேயம் (விபூதி) என்பது தேயு; கோதூளி என்கிற வாயவ்யம் வாயு. இவை தவிர ப்ராஹ்மம், திவ்யம் என்று இரண்டு சொன்னேன் இல்லையா? பஞ்ச பூதங்களில் பிருத்வியும் ஆகாசமும் விட்டுப் போயிருக்கோன்னோ? மந்தரங்களெல்லாம் ஆகாசத்தில்தான் சப்த தன்மாத்ரையாக வியாபித்திருக்கின்றன; அவற்றையே ரிஷிகள், யோக சக்தியால் நமக்குப் பிடிச்சு கொடுத்திருக்கா.'
'சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களை பஞ்சபூதங்களில் ஒவ்வொன்று ஆச்ரயித்திருப்பதாகச் சொல்லும்போது சப்தத்துக்குத்தான் ஆகாசம். இங்கே சப்தம் என்பது வேத மந்திரமே. ஆனதால் மந்திர தீர்த்தப் புரோக்ஷணமான ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ ஆகாச ஸம்பந்தமானதுன்னு புரிஞ்சிக்கலாம்.'
'வெய்யிலின்போது பெய்யும் மழையான ‘திவ்ய’மும் வானத்துலேந்து அதாவது தேவலோகத்திலேந்து – வரதாக சொல்ல படறதால ஒருவகையில் இது ஆகாச பூதத்தின் ஸம்பந்தமுடையதே.'
'பிருத்வி பாக்கி இருக்கிறது. ‘வாயவ்யம்’ என்று சொன்னதில் கோதூளியில் தானே நிக்கறோம்? காற்றினால் பூமிக்கு மேலே எழுந்து அந்தத் தூளிகள் நம்ம மேல படியதால அதுக்கு ‘வாயவ்யம்’ னு பேர் இருந்தாலும், வாஸ்தவத்தில் நம்மை அபிஷேகிக்கிற வாஸ்துவான குளம்படி மண்ணே பிருத்விதான். ஜெனரல் ரூலான வாருண ஸ்நானத்திலும் சுத்திக்காகத் தேய்த்துக் கொள்ளும் மிருத்திகை [புற்றுமண்] பிருத்விதான்.
'இப்படியாக ஐம் பூதங்களுக்காக ஐந்து ஸ்நான வகைகள். முடிவில் எதுவானாலும் ஆத்மாவைப் பாபம் போகக் குளிப்பாட்டுவதற்காகவே ஏற்படுத்தியிருக்கான்னு புரிஞ்சிக்கணும்.'
'ஸ்நானம் அஞ்சு வகை என்கறது மட்டுமில்லை. அவற்றில் ‘முக்ய’ ஸ்நானமான நீராடலுக்கே அஞ்சு அங்கங்கள் சொல்லியிருக்கு. முடிஞ்சா அத அப்புறமா சொல்லித் தரேன்.'
'வேத ஸுக்தங்களைச் சொல்வது ‘ஸுக்த படனம்’. ‘மார்ஜனம்’ என்பது ‘ஆபோ ஹி ஷ்டா’முதலிய மந்திரத்தால் முதல்ல ஜலத்த புரோக்ஷணம் பண்ணிக்கறது'
நான் பிரமித்துப் போனேன். குளியல்னு நாம ஸாமான்யமாகத் சொல்றதுக்கு இத்தனை லக்ஷணங்களா! விதிகளா!! மார்ஜனம்னு அவர் ஆரம்பிச்சு எவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கார்?
அவர் எனக்கு உபதேசித்த ஸ்நான வகைகள் எனக்கு வியப்பை கொடுத்ததில் ஆச்சரியம் இருக்கா என்ன?
'என்ன பாஸு. பிரமிப்பா இருக்காக்கும். ஸ்நானம் செய்யறதுக்கு இன்னம் அநேக ரூல்கள் இருக்கு. வெளி சுத்தத்துக்கு மாத்திரம்னா அழுக்குப் போக நன்றாகத் தேய்த்துக் குளித்தால் மட்டும் போதும்னு விட்டுடலாம். உள் சுத்தமும் நமக்கு தேவைங்கறத புரிஞ்சுண்டோன்னா தெரியாத, புரியாத (பிடிக்காத கூடத்தான்!) ரூல்களையும் இப்படி சுத்தியான ரிஷிகள் கொடுத்துள்ள சாஸ்திரப்பிரகாரம் ஃபாலோ பண்ணணும். அதபத்தியெல்லாம் நாளைக்கு பேசுவோமா?'
'ஏன் மாமா நாளைக்கு? எங்கேயாவது இப்ப வெளியே போக போறேளா?'
'அதுக்காக இல்ல பாஸு. ஒரு சிஷ்யனுக்கு சொல்லிக்கொடுக்கிறச்சே அவன் மனசுல ரொம்ப பாடங்களோட பாரத்த ஏத்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா நீ கத்துண்டாதான் மனசுலயும் நிக்கும். எத்தனை வருஷம் ஆனாலும் மறக்கவும் மறக்காது. நான் எங்க போப் போறேன். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம் அவசரப்படாம. சரியா? நாளைக்கு நீ இங்க வரும்போது இன்னிக்கு நீ க்ரஹிச்சிண்ட விஷயத்துல கேள்வி கேட்பேன். கரெக்டா நீ பதில் சொல்றியான்னு பார்க்க போறேன்.'
'மாமா, ஸ்கூல்ல தான் டெஸ்ட் வைக்கிறான்னா .... இங்கேயுமா?'
'நீதான் சமத்தாச்சே டா! கேள்விக்கெல்லாம் டாண் டாண்ணு பதில் சொல்ல மாட்டியா என்ன?'
சிரிக்கிறேன். நமஸ்கரிக்கிறேன். மறுநாள் வருவதாக சொல்கிறேன். விடைபெறுகிறேன்.
தொடரும்.
No comments:
Post a Comment