Saturday, November 16, 2024

மனதோடுயாகம் - பகுதி 2

பகுதி 2

மாலை விளையாட்டுக்கள் முடிந்து பரபரப்போடு ஆத்துக்குள் வருகிறேன். கடிகாரத்தை பார்க்கிறேன். மணி ஆறரை. கம்பி கொடியில் தொங்கிக்கொண்டிருந்த பிள்ளையார் துண்டை ஒரு சர்ர்ர்ர்.....

கைகால் மூஞ்சி அலம்பிண்டாச்சு. தொடச்சிண்டாச்சு. நெத்திக்கு இட்டுண்டாச்சு.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அம்மா கேட்கிறாள்:‌ 'சார் எந்த ட்ரெயினை பிடிக்க போறார்? அவசரம் அவசரமா எங்க கிளம்பறார்?'

சொல்கிறேன் அம்மாவிடம். எல்லாவற்றையும். அம்மாவுக்கு சந்தோஷம்.

'இந்தா 50 பைசா. இந்தா தனியா ஒரு பத்து பைசா வெச்சிக்கோ. போறச்சே தாத்தா கடைல வெத்தலை பாக்கு பழம் வாங்கிக்கோ. இந்த 50 பைசா வையும் தட்டுல வெச்சி மாமா கிட்ட குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணிக்கோ. அவர் சொல்லிக் கொடுக்கிறத நன்னா கிரஹிச்சுண்டு நன்னா கத்துக்கோ.'

'சரிம்மா.'

'அடுப்படியில உனக்காக கோதுமை கஞ்சி வச்சிருக்கேன். அதுல ரெண்டு டம்ளர் வளமுடன் குடிச்சிட்டு போ. கொஞ்சம் முன்ன பின்ன ஆனா நோக்கு பசி தாங்காது. கஞ்சிய குடிச்சிட்டு போனா கொஞ்சம் தெம்பா இருக்கும். மறக்காம அவர் நோக்கு குடுத்த சந்தியா வந்தன புஸ்தகத்தையும் மறக்காம எடுத்துண்டு போ.'

ஓட்டமும் நடையுமாக மடம் வந்து சேர்ந்தபோது சரியாக மணி ஏழு.

'வாடா பாஸு. மறந்துட்டியோன்னு நினைச்சேன். சந்தி பண்ணிட்டியோன்னோ?'

'இல்ல மாமா. லேட்டாயிடுத்துன்னு ஓடி வந்துட்டேன்.'

'அங்க இருக்கு பாரு பஞ்ச பாத்ர உத்ரணி. சந்திய முடிச்சுட்டு வா. வெயிட் பண்றேன். இன்னைக்கு கண்டிப்பா ஆரம்பிச்சு வெச்சுடறேன்.'

அரை மணி நேரம் காத்திருக்கிறார் என் மாலை வேளை சந்தியாவந்தனம் முடியும் வரை.

'இது என்னடா பொட்டலம்?'

'அது ஒன்னும் இல்ல மாமா. அம்மா கிட்ட சொன்னேன் நீங்க எனக்கு சந்தியாவந்தன கிளாஸ் எடுக்கப் போறதா. வெத்தல பாக்கு பழத்த குடுத்துட்டு நமஸ்காரம் பண்ணி உங்க கிட்ட ஆசீர்வாதம் வாங்கிண்டு கத்துக்க சொன்னா.'

அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது எனக்கும் புரிந்தது.

அவருக்கு ரெண்டுக்கு நாலு பெரிய தேக்கு மரப் பலகை. எனக்கு ஒரு சிறிய கோரைப்பாய். நானே ஏற்பாடுகளை செய்துவிட்டு நமஸ்கரிக்கிறேன்.

அவர் அமர்ந்துவிட்டார் மனையில். நான் உட்காரும்போது சட்டென்று அந்த மடத்தில் இருந்த ஒரு படத்தை பார்க்கிறேன். எனக்கு விசித்திரமாக இருந்தது அந்தப் படம். அந்தப் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து என்னை பார்த்து என்னை கேட்கிறார்.

'அப்படி என்ன அங்க பார்த்துண்டு இருக்க?'

'ஒன்னும் இல்ல மாமா. நீங்க ஆரம்பிங்கோ.'

'உன் கவனம் முழுக்க இன்னோண்ணுல இருக்கறச்சே எப்படி நான் சொல்றதுல ஈடுபாடு வரும்? எத பார்த்துண்டு இருந்த? அதை முதல்ல சொல்லு.'

'அதான் மாமா. அங்க ஒரு படம் தொங்கிண்டிருக்கே. அதுல கூட ஒரு சின்ன பையன் ஒருத்தர காலால உதைக்கிற மாதிரி இருக்கே. இதுவரைக்கும் இந்த படத்த இங்க பார்த்த மாதிரி ஞாபகம் இல்லையே மாமா எனக்கு.'

'ஓ. அதுவா. அது வாமனரோட படம். நேத்திகித்தான் பஞ்சாமி மாமா கொடுத்தார் மடத்துல மாட்டச் சொல்லி. வாமன அவதாரம் பத்தி நோக்கு ஏதாவது தெரியுமா?'

உதட்டை பிதுக்கி மண்டையை ஆட்டி எனக்குத் தெரியாது என்பதை அவருக்கு உணர்த்துகிறேன்.

தெரியாமல் இந்தப்படம் என் கண்ணில் பட்டு சந்தியா வந்தன வகுப்பு தாமதமாகிறதே என்று எனக்கு தோன்றுகிறது. இருப்பினும் அவர் சொன்ன வாமன அவதார கதையையும் சுருக்கமாக கேட்க வேண்டும் என்ற விருப்பமும் கூடவே இல்லாமலும் இல்லை.

'நீ சந்தியாவந்தனம் மந்திரங்கள கத்துக்க வந்திருக்கேன்னு வாமனருக்கே தெரிஞ்சிருக்கு பாரு.'

'வாமனருக்கும் சந்தியாவந்தனத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா மாமா.'

'ஓ... கண்டிப்பா இருக்கே.'

இப்படி ஆரம்பித்து மிக சுருக்கமாக வாமன அவதாரத்தை பற்றி சொல்கிறார். எனக்குள் ஆயிரம் கேள்விகள். எதைக் கேட்பது எதைக் கேட்காமல் விடுவது என்ற சந்தேகத்திலேயே மறைந்தன பல வினாக்கள்.

சட்டுனு ஒரு கேள்வி கேட்கணும். அவர் பதில் நீண்டு கொண்டு போய்விட்டால் என்ற ஒரு சந்தேகம் வேறு. கிளாஸ முடிச்சிட்டு ஆத்துக்கும் சீக்கிரம் போகணும் இல்லையா? நாம கத்துக்க வந்தது சந்தியாவந்தனத்தைப் பற்றி. நாம ஏதாவது வாமன அவதார கதைக்குள் கேட்கப்போய் அது பற்றிய ஸ்லாகிப்பு நீண்டுண்டே போயிடுத்துன்னா?

நான் அமைதியாக இருந்தது அவருக்கு சந்தேகத்தை கொடுத்திருக்க வேண்டும்.

'என்ன பாஸு. ஏதோ கேட்க நினைக்கிறாப்போல இருக்கே? எதுவானாலும் கேளு.'

அவர் கேட்டதற்காக ஒரு கேள்வி என்னிடத்திலிருந்து.

'வாமனர் பிரம்மச்சாரியா மாமா?'

எப்படிப்பட்ட கேள்வி இது என்று எனக்கு அப்போது தெரியாது. கேட்க வேண்டுமே ஏதாவது என்ற விதத்தில் தான் அந்த கேள்வியை நான் கேட்டேன் என்பதுதான் உண்மை.

'ஆமாம் பாஸு. உபநயனம் பண்ணிண்ட பிரம்மச்சாரி.'

'அந்த வாமனனுக்கு யார் மாமா பூணூல் போட்டு விட்டா? அவரோட அப்பாவா?'

'உனக்கு உங்க அப்பாவா போட்டுவிட்டா? அப்பா இல்லாத உனக்கு பெரியப்பா போட்டு விட்டாளோன்னோ. அதுமாதிரி வாமனருக்கும் தேவாதி தேவரெல்லாம் சேர்ந்து போட்டுவிட்டா. பாகவதத்துல இந்த வாமனாரோட உபநயனத்த பிரமாதமா சொல்லியிருக்கா.'

எனக்கு இப்போது சந்தியாவந்தன மந்திர அர்த்தங்கள் கற்கவேண்டிய ஆர்வம் சற்று பின்னடைவு பெருகிறது. வாமனருக்கு எப்படி பூணூல் கல்யாணம் நடந்தது அப்படிங்கறத தெரிஞ்சுகிறதுல ஆர்வம்.

'சுருக்கமாக சொல்றேளா அத பத்தி. கேட்கிறேனே.'

'சரி சொல்றேன். அதுக்கு முன்னாடி உபநயனம்னா என்னங்கறத சொல்றேன் முதல்ல. 'உப' ப்ளஸ் 'நயனம்' உபநயனம் ஆகறது. உப அப்படிங்கிற வார்த்தைக்கு பிரம்மத்துக்கு பக்கத்துல அப்படின்னு மீனிங். நயனம் அப்படின்னு சொன்னா அழைச்சிண்டு போறது அப்படின்னு அர்த்தம். யார் அழச்சிண்டு போவா? சிஷ்யனை குரு அழைச்சிண்டு போகணும். அதாவது தன்னுடைய சிஷ்யன ஜாக்கிரதையா கைய புடிச்சிண்டு பிரம்மத்துக்கு பக்கத்துல அழைச்சிண்டு போறததான் உபநயனம் அப்படின்னு சொல்றா. அப்படி அழைச்சிண்டு போற சிஷ்யன் பூணல் போட்டதிலிருந்து துவிஜன்னு பேர் எடுக்கறான். பிறக்கும்போது எல்லாரும் ஒண்ணுதான். ஆனா பிரம்மத்தை நோக்கி மந்திரங்கள் எல்லாம் சொல்லிண்டு டிராவல் பண்ணும் போது அவன் இரண்டாவது பிறப்புல பயணிக்கிறான் என்று அர்த்தம். புரிஞ்சுதா?'

புரியாவிட்டாலும் புரிஞ்ச மாதிரி மண்டையை ஆட்டியதால் அவரே தொடர்கிறார்.

'பிராமண குழந்தைகள் எல்லாம் எட்டு வயசுக்குள்ள பூநூல் போட்டுண்டனும். அதாவது காம சிந்தனைகள் ஒருத்தனுக்கு வரதுக்கு முன்னாடி போட்டுண்டுடணும். உபநயன தீக்ஷ எடுத்துண்டனும்.'

'அப்பாடி... எனக்கு ஆறு வயசுலயே போட்டாச்சு.'

என்னுடைய வெகுளித்தனமான தற்பெருமையை ரசிக்கிறார்.

'பூணூல் போட்டுண்டா மாத்திரம் ப்ரயோஜனம் இல்ல. பிரம்மத்தை நோக்கி போகணும் இல்லையா? பூணூல் போடும்போது வாத்தியார் அதுக்குண்டான மந்திரங்கள சிம்பாலிக்கா காட்டிடறார். அத நன்னா கெட்டியாப் பிடிச்சிண்டு விடாம மந்திரங்கள தொடர்ந்துண்டு பிரம்மத்தை அடையற வழிய நாமதான் பார்த்துக்கணும். பிற்காலத்துல கல்யாணம் பண்ணிண்டாலும் இந்த சந்தியா வந்தன பாதைகளையும் மறக்காம விடாம தொடர்ந்து செஞ்சிண்டு வரும்போது நம்மளோட அல்டிமேட் கோலான பிரம்மத்தை அடையறது சுலபமா போயிடறது. புரிஞ்சுதா?'

'மாமா என்னமோ சொன்னேளே துவிஜன் அப்படின்னு. அதப் பத்தி எனக்கு புரியற மாதிரி சொல்றேளா?'

அப்போது அவர் கேட்ட போது நான் சொல்ல தயங்கியதை இப்போது கேட்கிறேன்.

'நீ பக்ஷிகளோட முட்டையை பார்த்து இருக்கியா பாஸு? கோழி முட்டை வாத்து முட்டை அப்படி இப்படின்னு ஏதாவது?'

'ஏன் மாமா திடும்னு இப்படிக் கேட்கிறேள்? பார்த்து இருக்கேன் மாமா. வாணக்கார தெருவுல இருக்குற என்ற பிரெண்ட் ஆத்துல கோழி முட்டை பாத்திருக்கேன்.'

'அந்த முட்டைக்குள்ள என்ன இருக்கு தெரியுமா உனக்கு?'

'இது கூட தெரியாதா மாமா எனக்கு? கோழிக்குஞ்சு தானே இருக்கும் அதுக்குள்ள.'

'குஞ்சு முட்டைக்குள்ள இருக்கும்போது அதோட லோகம் அந்த முட்டை ஓட்டுக்குள்ள மட்டும்தான இருக்கும். அதுவே முட்டையை ஒடச்சிண்டு வெளிய வந்துட்டா அதோட லோகம் பெருசா ஆயிடறது இல்லையா? அப்படின்னா ஒரு பொறப்புக்குள்ள ரெண்டு லோகத்தை பார்க்கிற மாதிரி பூணூல் போடறதுக்கு முன்னாடி விளையாட்டுத்தனமா இருக்கிற ஒண்ணும் பகவத் சிந்தனையோட பூணூல் போட்டுண்டுதக்கு அப்புறம் ஒண்ணுமா ரெண்டு பிறப்பாயிடறது வாழ்க்கை. இப்ப நன்னா புரிஞ்சுதா நோக்கு?'

'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா போறது மாமா.'

'பசிக்கலையா நோக்கு. மணி ஒம்போது ஆப்போறதே?'

'ஒம்போதாஆஆஆஆ. நேரம் போனதே தெரியல மாமா. நாளைக்கு சரித்திர பாடத்துல டெஸ்ட் வேற இருக்கு. நான் போகணும். இன்னும் வாமனர் பத்தி தெரிஞ்சுக்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா ஆத்துக்கு போயே ஆகணும் மாமா.'

'சரி கிளம்பலாம்.'

மடத்தின் ஜன்னல்கள் கதவுகள் ஒவ்வொன்றாக சாத்துகிறேன். அவர் மடத்தின் வாசல் கதவை சாத்தி பூட்டு போட நான் அதை இழுத்து பார்க்க, இருவரும் கிளம்புகிறோம்.

'வர சனிக்கிழமை வா இதே டயத்துக்கு. மத்தத சொல்றேன்.'

தொடரும்...

No comments: