'வா பாஸு. ரெண்டே ரெண்டு பூஜை பாத்திரம் இருக்கு. அவைகள தேச்சுட்டு வந்துடறேன். அதுவரைக்கும் அமைதியா உக்காந்துக்கோ ஒரு ஓரத்துல.'
'நான் வேணா தேச்சி தரட்டுமா மாமா.'
'இல்லடா. எல்லாம் பித்தள பாத்திரம். அழுத்தம் கொடுத்து தேய்க்கணும். உனக்கு சரிப்பட்டு வராது. நீ குழந்தையோன்னோ. பரவாயில்ல. பத்து நிமிஷத்துல வந்துடுவேன்.'
அவர் சொன்னதைப் போல பாண்டுரங்கன் படத்திற்கு முன்னால் உட்காருகிறேன். ஜன்னல் வழியாக ஆற்றங்கரையிலிருந்து ரம்யமான சத்தத்துடன் வந்த காற்று படத்தை சிறிய அளவில் அசைக்கிறது. நின்று கொண்டிருக்கும் பாண்டுரங்கன் ஒரு சின்ன அசைவை கொடுத்த உணர்வு.
பேசிக்கொண்டு இல்லாததாலோ என்னவோ என் கண்கள் என்னையறியாமல் மூடிக் கொள்கின்றன. சிறிது நேரம் அப்படியே இருக்கிறேன்.
'காத்து அடிக்கிறதுல தூக்கம் வரதா பாஸு.'
அவர் இப்படி கேட்டவுடன் கண்களை திறக்கிறேன்.
'இல்ல மாமா. தூக்கமெல்லாம் வரல. சும்மாதான் கண்ண மூடிண்டு இருந்தேன்.'
'பேஷ் பேஷ். தியானம் பண்ணிண்டிருந்தியாக்கும். இது மாதிரி அமைதியா ஒரு எடத்துல கண்ண மூடிண்டு இருக்கிறது தானே தியானம்ன்னு சொல்றா. சரி நாம இன்னிக்கு பிராணாயாமத்தை கத்துப்போமா?'
வழக்கம் போல இருக்கைகளை ஏற்பாடு செய்து விட்டு நமஸ்காரங்களை முடித்துவிட்டு அமர்கிறோம்.
'பாஸு, பிராணாயாமம் அப்படிங்கற ஒரு வார்த்தைய ரெண்டா பிரிச்சு பார்த்தோம்னா 'ப்ராணா' 'ஆயமா' அப்படின்னு ரெண்டு பொருள்கள சொல்லிக் கொடுக்கற வார்த்தையா இருக்கு. இந்த எடத்தில ப்ராணா என்ற சொல் மூச்சுக்காற்றை குறிக்கறது. 'ஆயமா' அப்படின்னா நிறுத்தி வைக்கிறது அல்லது கட்டுப்படுத்தி வைக்கிறது. மூச்சை கட்டுப்படுத்துதல் என்ற பொருளில்தான் நாம இந்த பிராணாயாமம் என்ற சொல்லோட அர்த்தமாக புரிஞ்சிக்கறோம். எங்க நான் சொன்னத அப்படியே சொல்லு பாப்போம்.'
'பிராணாயாமம் அப்படிங்கற வார்த்தையில பிராணா என்கிற சொல்லும் ஆயமா என்கிற சொல்லும் அடங்கியிருக்கு. ப்ராணான்னா மூச்சுக்காத்து. ஆயமா அப்படின்னா கட்டுப்படுத்தறது. சரியா சொன்னேனா மாமா?'
'அவ்வளவுதாண்டா. நம்மளோட மூச்ச கட்டு படுத்தறக்கு பெயர்தான் ப்ராணாயாமம். சுருக்கமா சொல்லப்போனா இது ஒரு மூச்சுப்பயிற்சி அதாவது மூச்சுக்கான எக்ஸர்சைஸ்.'
'எக்ஸர்சைஸ் அப்படிங்கும்போதே சில விதிகள் அதுல அடக்கம் அப்படிங்கறத சேர்த்தே புரிஞ்சிக்கணும். உங்க பள்ளிக்கூடத்துல உடற்பயிற்சி செய்யும் போது கை கால்களை இந்த அளவுக்கு நீட்டணும் உடம்ப நேரா வச்சுக்கணும் கழுத்த ஆட்டப்படாது.... அப்படின்னு ஒவ்வொரு எக்ஸர்சைஸூக்கும் முறைகள் இருக்கோன்னோ. அதே மாதிரியே இந்த பிராணாயாமத்துக்கும் செயல் முறைகள் உண்டு.'
'பிராணயாமம் செய்யும்போது சொல்ற மந்திரத்தை பத்தி பின்னாடி பேசுவோம். அதுக்கு முன்னாடி இந்தப் பயிற்சிய பத்தி சில விஷயங்களை பார்ப்போம். சரியா. கூன் போடாம நேர நிமிர்ந்து சித்த நாழிக்கு உட்காரு என் முன்னாடி.'
'இப்ப உன்னோட ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டைவிரல் பவித்ர விரல் ரெண்டுலயும் மூக்கோட வலது இடது பக்கம் அழுத்திக்கோ. மூக்குல ரெண்டு நாசித் துவாரங்கள் இருக்கோன்னோ. வலதுபக்க நாசியை கட்டை விரலாலேயும் இடதுபக்க நாசியை பவித்ர விரலாலேயும் அழுத்தி புடிக்கணும் சரியா. ஏற்கனவே பிராணாயாமம் செஞ்சிண்டு வரவன்தானே நீ?
'இந்த பயிற்ச்சியை நீ கவனமாக கத்துக்கணும். ஏன்னா இது நம்மளோட மூச்ச ஒழுங்கு படுத்துற சமாச்சாரம். அதுக்காக ரொம்ப பயப்பட வேண்டாம்.'
'நம்மளோட மூச்சுக்கு ஆதாரமா இருக்கிறது நம்மளோட மூக்கும் மூக்குகளோட சம்பந்தப்பட்ட ரெண்டு துவாரங்களும், இல்லையா? இந்த துவாரங்கள நாசிகள்னு கூட சொல்லுவா இல்லையா? அதனால இந்த நாசிகள நாம எப்போதும் க்ளீனா வெச்சுக்கணும். அதுலயும் குறிப்பா இந்த பிராணாயாமம் செய்யும் போது நாசிகள சுத்தமா வெச்சிக்கணும். ஏன்னா, அந்த துவாரங்கள் வழியாத்தானே மூச்சு காத்து போயிட்டு வரணும் இல்லையா?'
'சந்தியாவந்தனம் செய்ய உக்காரதுக்கு முன்னாடியே முகம் கைகால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் நன்னா ஜலத்த விட்டு விரலால் துழாவி சளி, தூசு இல்லாமல் சுத்தம் செஞ்சிக்கணும். சுத்தமான துணியால கை கால்கள் மாத்திரம் இல்லாம மூக்குத் துவாரங்களையும் துடைச்சுடணும். இப்படி சுத்தம் செய்யறதால மூக்குத் துவராங்கள் வழியா தங்கு தடையில்லாம காத்து போயிட்டு திரும்ப வெளியே வரதுக்கும் வாய்ப்பு வரது இல்லையா?'
பிராணாயாமத்தை முறையா செஞ்சிண்டு வந்தா ஏராளமான பலன்கள் உண்டு. பொதுவா சொல்லணும்னா உடல் ஆரோக்கியமா இருக்கும். ஊளைச்சதை கரஞ்சுடும். தேவைக்கு அதிகமா கொழுப்புச் சத்து உடம்புல ஏறாது. கண்கள் பிரகாசமா இருக்கும். வயித்து கோளாறு, ஜீரணக் கோளாறு வராது. உடல் சிந்திக்கும் திறமை அதிகரிக்கும். உஷ்ண உடம்பா இருந்தா வெப்பம் கொறையும். முகம் அழகாயிடும். முக தேஜஸ் பிரமாதமா ஜொலிக்கும்.'
'எல்லா முக்கியமான நன்மைகளையும் சொல்லிட்டேன்னு தான் நெனைக்கிறேன். நான் ஏதாவது சொல்ல விட்டுப் போயிருந்தா அவைகள கூட நீ பிராணாயாத்த ப்ராக்டிகலா செய்ய செய்ய உனக்கே தெரிஞ்சுடும்.'
'சரி. இப்ப பிராணாயாம் மூலம் எப்படி மூச்ச கட்டுப்படுத்தறதுன்னு சொல்றேன்.'
'இந்த மூச்சு பயிற்சியில நாலு நிலைகள் இருக்கு.
முதலில் சுவாசத்தை உள்ளே இழுக்கறது. இதுக்கு பூரகம்னு பேர்.'
'இழுத்த சுவாசத்தை உள்ளே சித்த நிறுத்தி வைக்கறது. இது ரெண்டாவது ஸ்டேஜ் இத கும்பகம்னு சொல்லுவா.'
'அடுத்த ஸ்டேஜ் நிறுத்தின சுவாசத்தை வெளிய விடறது. அதுக்கு பேரு ரேசகம்.'
'கடைசியா வெளியே சுவாசத்தை விட்டோண்ண அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்தறது. இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்று சொல்லுவா'
'மாமா ஒரே ஒரு சந்தேகம். நாமதான் மூச்ச கம்ப்ளீட்டா விட்டுடறோமே. அதுக்கப்புறம் எதுக்கு பகிரங்க கும்பகம்?'
'சரியான கேள்வி பாஸூ. ஒரு பிராணாயாமம் முடிக்கறச்சே உடனே ஃபாஸ்டா இன்னொண்ணு ஆரம்பிக்காம கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். அந்த ரிலாக்ஸேஷன் தான் கேவல கும்பகம். அதாவது அமைதியா எல்லா மூச்சு காத்தும் வெளிக் காத்தோட சேரர வரைக்கும்னு புரிஞ்சுக்கோ. இந்த பகிரங்க கும்பத்துக்கு மேக்ஸிமம் போனா ஃபைவ் ஸிக்ஸ் ஸெகண்டுகள்தான் ஆகும். பண்ண பண்ண உனக்கே இது தெரிஞ்சுடும். ரொம்ப மண்டைய போட்டு உடச்சிக்க வேண்டாம்.'
'சரி. இதுவரைக்கும் என்ன பார்த்தோம்? பிரணாயாமம்னா என்ன அப்படின்னு தெரிஞ்சிண்டோம். எப்படி செய்யறதுன்னு மேலோட்டமா பார்த்தோம். பிரணாயாமம் பண்றதுக்கு முன்னாடி நாம எப்படி நாசிகள் ரெண்டையும் கிளீனா வச்சுக்கணும்னு பார்த்தோம். கடைசியா பிராணாயாமம் பண்றதுனால நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் அப்படின்னும் தெரிஞ்சிண்டோம், இல்லையா? இப்ப நாம பிராணாயாம பயிற்சியை மந்திரங்களோட கனெக்ட் பண்ணி மூச்ச இழுக்கிறதுக்கும், இழுத்த மூச்சை எப்படி புடிச்சு நிறுத்தணும்கறதையும், நிறுத்தின மூச்ச மெல்ல மெல்ல விடறதுக்கும் கத்துப்போமா?'
'இதுவரைக்கும் நான் உனக்கு சொல்லிக் கொடுத்ததயெல்லாம் கொஞ்சம் ஞாபகபடுத்திண்டிரு. பூஜ துணிகள கொஞ்சம் திருப்பாற்கடல் குளத்துல அலசி காயப் போட்டுட்டு வந்துடுறேன். பத்து நிமிஷம் தான் ஆகும். சமத்தா ஒக்காந்து இருக்கியா.'
அவர் ஒரு வாளியில் சில துணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பாற்கடல் பக்கம் செல்கிறார். நானும் அவர் சொன்னதைப் போல பாடங்களில் என்னுடைய ஞாபகங்களை கூட்டுகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment