பாண்டுரங்க மடத்திலிருந்து ஆத்துக்கு வரும்போது மணி ஒன்பதை தாண்டிவிட்டது.
'நன்னா கத்துண்டியா சந்தியாவந்தன மந்திரம் எல்லாத்தையும்.'
சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிடம் வாமனர் அவதாரம் பற்றிய அன்றைய சம்பாஷணைகளை சொல்கிறேன். என்னைப்போலவே அம்மாவும் ஆச்சரியத்துடன் அவைகளை கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாக இருந்தது.
'ஏம்மா இவ்வளவு உன்னிப்பா கேட்கிறியே. உனக்கு இந்த கதை தெரியாதா?'
'வாமனர்.. மூணடி மண்... தலையில் கால் வெச்சு அந்த அசுரன் கொட்டத்த அடக்கினது ... இது மாதிரி கொஞ்சமா தான் தெரியும். நீ இன்னிக்கு தெரிஞ்சுண்ட அளவுக்கு கூட தெரியாது. நீ நன்னா எல்லாத்தையும் கத்துக்கோ அது போதும். நீதான் பார்க்கறயே ... என்னோட உழைப்பு தான் என்னோட பகவான். நீ கத்துண்டு எனக்கு எல்லாத்தையும் டைம் கிடைக்கும்போது சொல்லிக் கொடு. தெரிஞ்சுக்கிறேன். '
அவளைச் சொல்லி குற்றமில்லை. எங்கள் வீட்டு நிலைமை ஒருத்தர் தேய்ந்தால்தான் இன்னொருத்தருடைய வளர்ச்சி. அம்மாவோட உழைப்புக்கும் என்னோட வளர்ச்சிக்கும் பகவான் குறுக்கே வந்து குழப்பம் செய்யாமல் இருந்தாலே போதும் என்கிற நிலையில்தான் கடவுள் நம்பிக்கை ஓடிக்கொண்டிருந்தது என்பதைச் சொல்ல வருத்தமாக இருந்தாலும் அதுதானே உண்மை?
மறுநாள் டெஸ்ட்டுக்கான படிப்பை முடித்துவிட்டு படுக்க செல்கிறேன். உறக்கம் வருவதற்கு முன்பாக வாமன உருவம் ஓடிக்கொண்டிருந்தது.
'ஒருத்தரை தண்டிக்கணும்னா வயசு வித்தியாசம் வேண்டாம் போல இருக்கே?'
இப்படியான கேள்விகளும் வந்து சென்ற பின்னர்தான் உடல் உறக்கம் கண்டது.
இரண்டு நாட்கள் கடந்தது தெரியாமல் சென்றது. ரகு சாஸ்திரிகள் என்னை மடத்துக்கு வரச்சொன்ன சனிக்கிழமை வந்துவிட்டது.
அவசர அவசரமாக சாயரட்சை சந்தியா வந்தனத்தை முடித்துக்கொண்டு மடத்துக்கு வந்துவிடுகிறேன். லேசாக சாத்தி வைத்திருந்த கதவை நான் திறந்து உள்ளே சென்றபோது ரகு சாஸ்திரிகள் தன் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தார். கதவை நான் திறந்தபோது ஏற்பட்ட க்ரீச் சத்தம் அவர் மௌனத்தை கலைத்திருக்க வேண்டும்.
சப்தம் வெளிப்படும் அளவிற்கு கதவை திறந்துவிட்டு மெல்ல திறந்து இருக்கலாமோ என்று வருத்தப்பட என்ன இருக்கிறது?
'வா பாஸு. பாண்டுரங்கனுக்கு நேவேத்தியம் காமிச்சிட்டு ஆரம்பிச்சுடலாம்.'
பாண்டுரங்க மடத்தில் அவர் காட்டும் நிவேதனத்தில் பல நாட்களில் சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ சுண்டலோ புளியோதரையோ நான் பார்த்தவரை இருந்ததில்லை. ஒரு மாம்பழம் அல்லது ஒரு சாத்துக்குடி அல்லது உதிர்த்த திராட்சைப் பழங்கள் பத்து பதினைந்து... இப்படித்தான் ஏதாவது இருக்கும். அன்றைக்கு இவைகள் கூட இல்லாமல் பத்து காய்ந்த திராட்சைகளை பாண்டுரங்கனுக்கு காண்பித்துவிட்டு இரண்டே இரண்டை தான் எடுத்துக்கொண்டு மற்ற எண்ணிக்கைகளை என்னிடமே கொடுத்துவிட்டார்.
கற்பூர ஆரத்திக்கு பிறகு என்னை பாண்டுரங்கனை நமஸ்கரிக்க சொல்லிவிட்டு அதன் பிறகு அவருக்கான என் நமஸ்காரத்தையும் அவர் ஏற்றுக்கொண்ட பின் மணைகளில் உட்காருகிறோம்.
'நாம அன்னிக்கு எந்த விஷயத்தைப் பத்தி பேசிண்டிருந்தோம்? ஞாபகம் இருக்கோண்ணோ பாஸு.'
அன்று அவரிடமிருந்து அறிந்த வாமனர் அவதாரம் பற்றிய விஷயங்களை முடிந்தவரை ஞாபகப்படுத்தி சொல்கிறேன்.
'பாஸு, அன்னிக்கி வாமனருக்கு எப்படி உபநயனம் நடந்ததுன்னு கேட்டியோன்னோ என்னை?'
'நீயே ஆர்வமா கேட்டதால சுருக்கமா சொல்லிட்டு நாம சந்தியா வந்தனத்துக்கு போகலாமா?'
சரி என்று சொல்லும் விதமாக என்னிடமிருந்து மண்டை ஆட்டல் கிடைத்தவுடன் ஆரம்பிக்கிறார்.
'வாமன மூர்த்தியாக அவதரிச்ச பகவானுக்கு உபநயனம் எப்பட நடந்ததுன்னு ஸ்ரீமத் பாகவதம் பிரமாதமா வர்ணிச்சிருக்கு.'
'வாமனருக்கு லோகத்துக்கே இன்னிக்கும் பிரத்யக்ஷமா இருக்கிற சூரிய பகவான்தான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிக்கிறார். பூணூலை தன் கையாலேயே பிரகஸ்பதி போட்டுவிடறார். பிரம்மச்சரியத்துக்கு ரக்ஷ மாதிரி இருக்கிற மூஞ்சி கயிற கஸ்யபர் பகவான் இடுப்புல கட்டறார். ஆயுளை விருத்தி பண்ணக்கூடிய சக்தி கொண்ட மான் தோல பூமாதேவி போத்தறாள். அதே மாதிரி பலாச தண்டம்னு ஒண்ண உன் கையில தண்டம் கொடுத்தாளே நோக்கு பூணூல் போடறச்சே? அத பகவானுக்கு யார் கொடுத்தா தெரியுமோ? ஓஷதிகளுக்கெல்லாம் அதிபதியான சோமன். அம்மா அதிதி கௌபீனத்த கட்டி விடுறா. கௌபீனம்னா என்னன்னு தெரியுமோன்னோ?'
இந்தக் கேள்விக்கு என்னிடமிருந்த வந்த வெட்கத்தையும் சிரிப்பையும் ரசித்துவிட்டு தொடர்கிறார்.
'அப்புறம் பிரம்மாவே அவருக்கு கமண்டலத்தை தன் கையால கொடுக்கிறார். ஞானத்தை கொடுக்கக்கூடிய சரஸ்வதி ஜெபமாலை கொடுக்கிறாள். குபேரன் பிக்ஷை பாத்திரத்தை கொடுத்தோண்ண உமாதேவியை வந்து பிக்ஷை இடறா. இப்படி எல்லாரும் வந்து இந்த உபநயனத்த வாமனருக்கு நடத்திக் கொடுத்ததால அவர் பிரம்ம தேஜஸோட ரொம்ப பிரகாசமா இருந்தார் அப்படின்னு ஸ்ரீமத் பாகவதம் ஸ்லாகிக்கிறது.'
'எனக்கும் இப்படி நடந்திருந்தா பிரம்ம தேஜஸ் கிடைச்சிருக்கும் இல்ல மாமா?'
அப்பாவியாக என்னுடைய கேள்வி இருந்தது என்பது எனக்கே தெரியும். இருவரும் சிரிக்கிறோம். ஆனாலும் அவருடைய பதில் எனக்கு ஆச்சரியமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது.
'சரியான வயசுல உபநயனம் பண்ணிண்ட எந்த பாலகனும் அன்னிக்கு பிரம்ம தேஜஸோட தான் கண்ணுக்கு தெரியுவான். நீயும் அன்னிக்கு என் கண்ணுக்கு அப்படித்தான் தெரிஞ்ச.'
'நான் சொன்னா நம்பணும். இப்படி சிரிக்க கூடாது. அன்னிக்கு இருந்த பிரம்ம தேஜஸ எப்போதும் காப்பாத்திக்கறது உன் கையில மட்டும்தானே இருக்கு. வேளா வேளைக்குக்கு சந்தி பண்ணிண்டு மந்திரங்களை உள்வாங்கி ஜபிச்சிண்டு பிரம்மச்சரியத்தை கடப்பிடிச்சுண்டு வந்தா நம்மள விட்டு எங்க போயிட போறது பிரம்ம தேஜஸ்?'
அவரிடம் பேசும்போது நிறைய உரிமைகளை எடுத்துக்கொள்வேன். குரு சிஷ்யன் என்ற நிலையைத் தாண்டி ஏதோ ஒரு தாய் மாமா பந்தம் இருந்தது என்றால் அது மிகையல்ல.
நான் உரிமைகளை எடுத்துக் கொள்வதற்கு அவர் என்றும் என்னை கண்டிக்காமல் இருந்தது கூட காரணமாக இருந்திருக்கலாம். என்னுடைய அசட்டுத்தனமான கேள்விகள் கூட பல சமயங்களில் விடைகள் பெற்றிருக்கின்றன.
'பாஸு நோக்கு இப்ப ஞாபகம் இருக்குமான்னு தெரியல. உபநயனம் அன்னிக்கி உன்ன ஒரு கல்லு மேல நிக்க வச்சு ஒரு மந்திரம் சொன்னேனே அதுக்கு அர்த்தம் என்னன்னு தெரியுமா?'
என் முகத்தில் வெளிப்பட்ட ஆச்சர்யமும் ஆர்வமும் அவரை தொடர வைத்தது.
'இந்த கல்லு மாதிரி உடம்பும் உறுதிகொண்ட மனசும் உள்ளவனா நீ இருக்கணும். உன்னோட வாழ்க்கைக்கு தடையா இருக்கிறவாள நீ கிட்டக்க சேர்க்கப்ப்படாது.... இதுதான் அந்த மந்திரத்தோட அர்த்தம்.'
'மாமா, அந்த மந்திரத்தை எனக்காக ஒரு தடவை சொல்றேளா? ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.'
'ஓ.... தாராளமா சொல்றேனே.'
'ஆதிஷ்டேமம் அச்மானம்,
அஸ்ம இவ த்வம் ஸ்திரோ பவ/
அபிதிஷ்ட்ட ப்ரு தன்யத:/
ஸகஸ்வ ப்ருதனாயத://
'அதோட மாத்திரம் அந்த மந்திரம் முடியல. நீ பிரம்மச்சாரி ஆயிட்ட, சந்தியாவந்தனத்தையும் மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யணும். முழிச்சுக்கோ தூங்காத.... அப்படின்னு பூணூல் போட்டுக்கர பசங்களுக்கான இன்ஸ்ட்ரக்ஷனோட அந்த மந்திரம் முடியும்.'
'இதிலேருந்து என்ன தெரியறது? உபநயனம் ஒரு பையனுக்கு பண்ணி வைக்கும் போது சொல்லப்படற மந்திரங்கள் அவனுக்கு பிரம்மதேஜஸ கொடுக்கும். அதுலேந்து அவன் தெனமும் செஞ்சிண்டு வர சந்தியாவந்தனம் அவனுக்கு அசாத்திய பலத்தையும் மனோ தைரியத்தையும் அவன் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அறிவையும் சந்தேகமில்லாமல் கொடுக்கறது. புரியறதா நன்னா உனக்கு?'
'நீ எதேச்சையா வாமனர் படத்த பார்க்கப் போயி எவ்வளவு கத்துண்டிருக்க பார்! உபநயனத்துல அளிக்கப்படற காயத்ரி மந்திரோபதேசம் தான் எல்லாத்தையும் முதலாவதாக இருக்கிறதால அத பிரம்ம உபதேசம் அப்படின்னு சொல்றா எல்லாரும்.'
ஏதோ என் மேல் மெல்ல மெல்ல அவர் மின்சாரத்தை எனக்கு தெரியாமலேயே பாய்ச்சிக் கொண்டிருந்த உணர்வு.
எதேச்சையாக நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நம்மை அறிவுப்பாதையில் அழைத்துச் செல்கிறது போல இருக்கிறது.
'மாமா, ஒரு நிமிஷம் டைம் தரேளா?'
இப்படி கேட்டுவிட்டு வாமனர் படத்தின் அருகே சென்று பகவானை உற்று நோக்குகிறேன்.
படத்தை பார்த்துவிட்டு உண்மையிலேயே அவர் ஸ்லாகித்த பிரம்ம தேஜஸ் என்னையும் பற்றிக் கொள்ளாதோ என்ற ஏக்கத்தில் அவரிடம் திரும்ப வருகிறேன்.
என் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் குளத்தால் அரை பார்வையோடு அவர் முன் அமர்கிறேன்.
'இன்னிக்கே மத்ததையும் ஆரம்பிக்கலாமா பாஸு?'
தெய்வ உணர்வில் பூரணமாக இருந்ததால் என்னால் இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது சாத்தியமாக இல்லை.
அதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தொடர்ச்சியை மற்றொரு நாளைக்கு அவராகவே தள்ளிப் போடுகிறார்.
தொடரும்.
No comments:
Post a Comment